ஒரு சிலிண்டர்: மானியம் கிடைக்காவிட்டால் புகார் செய்யலாம்! தமிழக அரசு
ஞாயிறு, 6 ஜூலை 2008 (11:23 IST)
ஒரு சமையல் எரிவாயு வைத்திருப்பவர்கள், மானியம் கிடைக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழக அரசு ஒரு சமையல் எரிவாயு வைத்துள்ளவர்களுக்கு எரிவாயு ஒன்றுக்கு ரூ.30 வீதம் மானியம் வழங்கும் திட்டத்தினை 1.7.2008 முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஆணையிட்டது.அதனடிப்படையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுபாப்பு துறை ஆணையயாளர் 30.6,2008 அன்றைய தினமே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை நகர துணை ஆணையாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் இயங்கும் எரிவாயு முகவர்களை அழைத்து துணை ஆணையர் (ந) தெற்கு (ம) வடக்கு ஆகிய இரு துணை ஆணையர்களும் இத்திட்டத்தினை 1.7.2008 முதல் அமல்படுத்த அறிவுறுத்தி உள்ளனர். சென்னை நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செயல்படும் எரிவாயு முகவர்களுக்கு மானிய முன் தொகை நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு எரிவாயு முகவர்கள் அனைவருக்கும் இன்றைய தினம் மானிய முன்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 1.7.2008 முதல் ஒரு சமையல் எரிவாயு இணைப்புள்ள அனைத்து நுகர்வோருக்குரிய மானிய தொகை எரிவாயு ஒன்றுக்கு ரூ.30 வீதம் இதன் மூலம் எரிவாயு முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு எரிவாயு வைத்துள்ள எந்த நுகர்வோராவது மானியம் பெற தவறியிருந்தால், அவர்கள் 1.7.2008 முதல் எரிவாயு வாங்கியுள்ள பில்லை சம்பந்தப்பட்ட எரிவாயு முகவரிடம் காண்பித்து மானியம் ரூ.30-ஐ பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனைத்து ஒரு எரிவாயு வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மானிய விலையில் எரிவாயு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இத்திட்டம் குறித்து குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்.