ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி உதயம்!
சனி, 5 ஜூலை 2008 (10:55 IST)
தூத்துக்குடி மாநகராட்சியை முதலமைச்சர் கருணாநிதி ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி நகரசபையை, மாநகராட்சியாக அறிவித்தார்.
மாநகராட்சிக்கான தொடக்க விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி.பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த விழாவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகிக்கிறார்.
விழாவில் முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநகராட்சியை தொடங்கி வைக்கிறார். விழாவில் மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.