கேபிள் டி.வி. பட்டியலில் மதுரை இல்லாதது ஏன்? ஜெயலலிதா!
வெள்ளி, 4 ஜூலை 2008 (17:41 IST)
தமிழ்நாட்டில் எல்லா வகையிலும் இரண்டாவது பெரிய மாநகரமான மதுரை கேபிள் டி.வி. பட்டியலில் இல்லாதது ஏன்? என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பணிகள் தஞ்சாவூர், கோவை, வேலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தென் தமிழகத்தின் மிகப்பெரிய நகரம், தமிழ்நாட்டில் எல்லா வகையிலும் இரண்டாவது பெரிய மாநகரமான மதுரை இந்த பட்டியலில் இல்லை. அங்கே கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிக்கும், பேரன்கள் கலாநிதி, தயாநிதி மாறன் ஆகியோருக்கும் இடையே கேபிள் விவகாரத்தில் பெரும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவேதான் மதுரை மாநகரம் அந்தப் பட்டியலில் இல்லை.
திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள அரசு கேபிள் டிவி நிறுவனம் மதுரை மண்டலப் பகுதி கேபிள் நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும் என்று கருணாநிதி விளக்கம் சொல்கிறார். மதுரை நகரில் மு.க.அழகிரியின் கேபிள் சாம்ராஜ்யத்திற்குள் அடியெடுத்து வைக்காமல் தமிழக அரசு கேபிள் டிவி கழகம் தடுக்கப்படுகிறது என்பதுதான் இதன் பின்னணி.
வரலாறு கண்டிராத விலைவாசி உயர்வு, பணவீக்கம், பற்றாக்குறை, விவசாயம் முடக்கம், பசி, பஞ்சம் என்று கோடானுகோடி மக்கள் கண்ணீர் வடிப்பது ஒரு பக்கம். எதைச் செய்தாலும் பணமே பிரதானம் என்று வாரிச்சுருட்டும் கருணாநிதி குடும்பம் ஒரு பக்கம். அன்றாட வாழ்க்கைக்கு வழி இன்றி நிற்கும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம்.
கருணாநிதி குடும்பத்தின் நடவடிக்கைகளை மக்கள் பார்வைக்கு, தேர்தல் நேரத்தில் இந்திய வாக்காளர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல தகவல்களைத் திரட்ட அ.இ.அ.தி.மு.க முடிவு செய்துள்ளது. கருணாநிதி குடும்பத்தின், விகார செயல்கள் அனைத்தும் அடங்கிய தகவல் தொகுப்பு உருவாகிட தமிழக மக்கள் அனைவரும் உதவ முன்வருமாறு வேண்டுகிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.