நடப்பு ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3,784 கி.மீ. நீள சாலைகளையும், 284 பாலங்களையும் ரூ.905 கோடியே 19 லட்சம் செலவில் அகலப்படுத்தி, மேம்படுத்துவதற்கு முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த பணிகள் நிறைவேற்றியபின் திருவாரூர், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும், இடைவழித்தடம் அல்லது இருவழித்தடம் கொண்டவையாக அகலப்படுத்தப்படும்.
மாவட்ட முக்கிய சாலைகளில் 291 கி.மீ. நீள சாலைகள் அகலப்படுத்தப்படுவதுடன் 497 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்படும். மாவட்ட இதர சாலைகளில் 1,259 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்தும் பணிகளும், 95 கி.மீ. நீள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
புதிய திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லும் மாவட்ட இதர சாலைகளில் 823 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்தும் பணிகளும், மேலும் இவ்வாண்டு அரசு அறிவித்தவாறு 27 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் 81 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மொத்தம், 905 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இந்த சாலைப்பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கி, நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் நிறைவேற்றி முடிக்குமாறு முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.