கலந்தாய்வு மாணவர்களுக்கு 50 விழுக்காடு கட்டண சலுகை: அரசு அறிவிப்பு!
வெள்ளி, 4 ஜூலை 2008 (15:04 IST)
பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாவில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு 50 விழுக்காடு பேருந்து பயண கட்டண சலுகையை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2008-09 கல்வியாண்டின் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளியூரிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணக் கட்டண சலுகை கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போன்றே நடப்பு கல்வியாண்டிலும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கலந்தாய்விற்கு வரும் மாணவர் மற்றும் ஒரு நபர் 50 விழுக்காடு இரு வழி பயணக் கட்டண சலுகையினை பெறலாம்.
கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் ஒவ்வொரு மாணவருக்கும் அவர் கலந்து கொள்ளும் நாள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டு வருகிறது.
இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டி பயணம் மேற்கொள்ளவிருக்கும் மாணவர்கள் இந்த அழைப்பு கடிதத்தின் இரண்டு ஒளிநகல்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்றினை அரசு பேருந்து பயண சீட்டு முன்பதிவு செய்யும் அலுவலரிடமோ அல்லது பயணம் மேற்கொள்ளும்போது பேருந்து நடத்துனரிடமோ அளிக்க வேண்டும்.
ஒளி நகலை பெற்றுக் கொண்ட அலுவலர் அல்லது நடத்துனர் கலந்தாய்விற்கான அசல் அழைப்புக் கடிதத்தின் முன் பக்கத்தில் '50 விழுக்காடு பயணக் கட்டண சலுகை அளிக்கப்பட்டது' என்று சான்று அளித்த பின்பு, தக்க பயணச் சீட்டுகளை பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழங்குவர்.
அதே போன்று கலந்தாய்வு முடிந்த பின்னர் சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும்போது அழைப்பு கடிதத்தின் இரண்டாவது ஒளி நகலை பயன்படுத்தி மேற்கூறிய நடைமுறைகளை பின்பற்றி 50 விழுக்காடு பயணக் கட்டண சலுகை பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.