தமிழகம்: இட ஒதுக்கீடு வழக்கில் 8ஆம் தேதி இறுதி விசாரணை!
வியாழன், 3 ஜூலை 2008 (15:36 IST)
தமிழகத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 8ஆம் நடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், கோவையை சேர்ந்த ராஜாமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கி இருப்பதால் பிற்படுத்தப்பட்டோருக்கு 7 விழுக்காடு குறைந்து மொத்த ஒதுக்கீடு 23 விழுக்காடாகி விட்டது. இது போதாது. எனவே இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் இந்த வழக்கின் மீது விசாரணை நடத்தினர்.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய், வழக்கு தொடரப்பட்டு 7 மாதங்கள் ஆகிவிட்டன. இது முக்கியமான வழக்கு எனவே உடனடியாக தீர்ப்பு கூற வேண்டும் என்றார்.
இதையடுத்து, ஜூலை 8ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு கூறப்படும் நீதிபதிகள் அறிவித்தனர்.