கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்: கா‌ங்‌கிர‌ஸ்!

வியாழன், 3 ஜூலை 2008 (12:08 IST)
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில் வல்லுநர் குழு அறிக்கை என்ற பெயரில் பீதியை ஏற்படுத்தி வரும் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாஅவர் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தும்படி 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த 30 மாதங்களாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தி வரும் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு டெல்லியைச் சேர்ந்த இரண்டு ஐ.ஐ.டி. பேராசிரியர்களிடமிருந்து அறிக்கையை பெற்று வெளியிட்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

கேரள அரசால் விரும்பி வரவழைக்கப்பட்ட ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்தால் முல்லைப் பெரியாறு அணைக்கும், இடுக்கி அணைக்கும் இடையே உள்ள பகுதிகள் நீரில் மூழ்கி லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்க நேரிடும் என்று கூறியுள்ளது.

கேரள அரசு "வல்லுநர் அறிக்கை' என்ற போர்வையில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களிடம் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது என்று டி.சுதர்சனம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்