8 மாவட்டங்களில் ஆகஸ்ட் 15ல் அரசு கேபிள் டி.வி. தொடக்கம்!
புதன், 2 ஜூலை 2008 (15:50 IST)
நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அரசு கேபிள் டி.வி. தொடக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு கேபிள் டி.வி. கர்ப்பரேஷன் கேபிள் இணைப்புப் பணிகளை ஏற்கனவே குறிப்பிட்டப்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி இப்பணிகளுக்கான டிஜிட்டல் ஹெட் என்டு போன்ற உபகரணங்கள் அயல்நாட்டிலிருந்து தற்போது பெறப்பட்டுள்ளன.
அவை தஞ்சை, நெல்லை, கோவை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளன. நெல்லையில் அமைக்கப்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தில் உபகரணங்களை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மையத்திலிருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு கேபிள் இணைப்புகள் வழங்கும் பணி ஆகஸ்டு 15 முதல் தொடங்கும்.
தென் மாவட்டங்களுக்கான கட்டுப்பாட்டு மையம் நெல்லையில் அமைவதால், அப்பகுதியில் மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங் களுக்கும் கேபிள் இணைப்புகள் வழங்க ஏதுவாக அமையும்.
மதுரை போன்ற பிற தென் மாவட்டங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டால், கன்னியாகுமரி போன்ற தென்கோடி மாவட் டங்களுக்கு உடனடியாகக் கேபிள் இணைப்பு வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்பதால், முதல் கட்டமாக மதுரைக்கும் சேர்த்து, நெல்லையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.