சென்னையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தற்போது சீரடைந்து வருகிறது. இன்று மாலைக்குள் அனைத்தும் சரியாகி விடும் என்று தென் பிராந்திய இந்தியன் ஆயில் ஓஷன் சீனியர் மேனேஜர் சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், கார் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்து வந்து தங்கள் வாகனங்களின் டேங்க்குகளை நிரப்பி சென்றனர்.
இதனால் பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. வாகன ஓட்டிகளை காவல்துறையினர் ஒழுங்குப்படுத்தினர். சில மணி நேரங்களில் பெட்ரோல், டீசல் விற்று தீர்ந்து விட்டதாக கூறி நிலையங்களை மூடுவிடுகின்றனர்.
தட்டுப்பாட்டை போக்க எண்ணெய் நிறுவனங்கள் கூடுதலாக பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் அனுப்பி வைத்து நிலைமை சரி செய்தனர். இருந்தாலும் ஆங்காங்கே தட்டுப்பாடு இருக்கத்தான் செய்தது.
இந்த நிலையில் சில பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல், டீசல்களை பதுக்கி கொள்ளை லாபத்துக்கு விற்பதாக தமிழக அரசுக்கு புகார் வந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உணவு வழங்கல் மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு சோதனை நடத்தினர்.
அதில், பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பிரீமியம் வகை பெட்ரோல், டீசல் மட்டுமே விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அனைத்து வகை பெட்ரோல், டீசலையும் விற்க வேண்டும் என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.