இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, பன்னாட்டு நிறுவனமான அலையன்ஸ் டயர்ஸ் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள யோகேஷ் ஏஜன்சீஸ் மற்றும் முதலீடுகள் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த வார்பெர்க் பிங்கஸ் நிறுவனமும் இணைந்து 'ஏடிசி டயர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற ஒரு புதிய தொழில் நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.
இந்தப் புதிய தொழில் நிறுவனமாகிய ஏடிசி டயர்ஸ் நிறுவனம் திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டயர் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றினை அமைத்திட முடிவு செய்துள்ளது.
ஏடிசி டயர்ஸ் நிறுவனம், 3 ஆண்டு காலத்தில் ரூ.300 கோடி அளவுக்கும், அடுத்த இரண்டு ஆண்டுகள் மேலும் ரூ.100 கோடி அளவுக்கும் ஆக மொத்தம் ரூ.400 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யும். 1000 பேருக்கு நேரடியாகவும், 800 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கும்.
புதிய டயர் தொழிற்சாலையை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை செயலாளர் பரூக்கியும், ஏடிசி டயர்ஸ் நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அசோக் மஹன்சாரியாவும் கையெழுத்திட்டனர் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.