2006ல் 16 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையர்க்கு ரூ.1.23 கோடியும், 2007ல் 19 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு அவர்களின் மரபுரிமையர்க்கு ரூ.1.75 கோடியும் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 27 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்தம் மரபுரிமையர்களுக்கு மொத்தம் 1 கோடியே 65 லட்ச ரூபாய் பரிவுத் தொகை வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கவிஞர் பெரியசாமித் தூரன், பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் ஆகியோருக்கு ரூ.20 லட்சம் ரூபாயும், மகாவித்வான் ரா.ராகவையங்கார், உடுமலை நாராயண கவி, கு.மு.அண்ணல் தங்கோ, அவ்வை தி.க. சண்முகம் உள்பட 19 தமிழறிஞர்களின் நூல்களுக்கு தலா ரூ.95 லட்சமும் சேர்த்து 21 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று ரூ.1.15 கோடி பரிவுத் தொகை வழங்கினார்.
அரசுடைமையாக்கப்பட்டுள்ள மற்ற 6 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு அவர்கள் உரிய சான்றாவணங்களை வழங்கியபின் பரிவுத்தொகை வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.