தமிழக‌த்‌தி‌ல் ரூ.5270 கோடி ‌விவசாய கட‌ன் தள்ளுபடி!

வெள்ளி, 27 ஜூன் 2008 (13:09 IST)
தமிழக‌த்‌தி‌ல் ரூ.5,270 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயன் அடைந்தவர்கள் பட்டியல் வங்கிகளில் நேற்று வெளியிடப்பட்டன.

மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன் ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் அறிவித்தார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து கடன் தள்ளுபடியான விவசாயிகளின் பட்டியலை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று சமீபத்தில் அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். அத‌ன்படி தமிழக‌த்‌தி‌ல் மத்திய அரசு அறிவித்தபடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பட்டியலை வங்கிகள் நே‌ற்று வெளியிட்டன.

இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பு வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் நாராயணன் கூறுகை‌யி‌ல், மத்திய அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடியால் தமிழக‌த்‌தி‌ல் சுமார் 17 லட்சத்து 35 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். அவர்களது கடன் தொகை ரூ.5,270 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.4,300 கோடியும், தனியார் வங்கிகள் மூலம் ரூ.800 கோடியும், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.170 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள் பட்டியல் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகிறது. 30ஆ‌ம் தேதிக்குள் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வ‌ங்‌கிக‌ள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளிலும் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டு விடும் எ‌ன்று கூ‌றினா‌ர் நாராயண‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்