அண்ணா பல்கலைக்கழகத்தின் 7-வது துணைவேந்தராக இருந்த டி.விஸ்வநாதன் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய துணைவேந்தராக மன்னர் ஜவஹரை, தமிழக ஆளுநர் சுர்ஜித் பர்னாலா இன்று நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர் மூன்றாண்டு இந்த பதவியில் நீடிப்பார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005-ல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற டி.விஸ்வநாதன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்தார். அதுபோல், மாணவ, மாணவிகளிடையே ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டுவந்தார்.
குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் ஓய்வு பெற்ற மறுநாளே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்தது விஸ்வநாதன் துணைவேந்தராக இருந்த காலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.