நாளை எம்.பி.பி.எஸ். தரவ‌ரிசை பட்டியல் வெ‌‌ளி‌யீடு!

வெள்ளி, 27 ஜூன் 2008 (10:36 IST)
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவ‌ரிசை பட்டியல் நாளை வெ‌ளியிடப்படுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் எ‌ம்.‌பி.‌பி.எ‌ஸ்., ‌பி.டி.எ‌‌ஸ். படி‌ப்பு‌க்கான தரவ‌ரிசை பட்டியல் ஒட்டப்படு‌கிறது. சுகாதாரத் துறையின் இணையதள‌த்‌திலு‌ம், தமிழக அரசின் இணைய தள‌த்‌திலு‌ம் தரவ‌ரிசை பட்டியல் வெளியிடப்படு‌கிறது.

தமிழகம் முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு மொத்தம் 12,274 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்ணை தேர்வுத் துறையிலிருந்து மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் பெற்று விட்டது.

இவ்வாறு மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 400 - க்கும் மேற்பட்ட மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்ணைச் சேர்த்து தரவ‌ரிசை பட்டியலில் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல் 10 இடங்களில் இடம்பெறும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ஜூன் 28ஆம் தேதியன்று அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200-ஐ மொத்தம் 8 மாணவர்கள் வாங்கியுள்ளனர். இயற்பியல் - வேதியியல் ஆகிய இரண்டு பாடங்களிலும் 200-க்கு 200-ஐ 52 மாணவர்களும் உயிரியல் - வேதியியல் - இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களில் ஏதாவது ஒன்றில் 200-க்கு 200-ஐ 278 மாணவர்களும் வாங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட் - ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.75. இந்த ஆண்டும் உயிரியல் - வேதியியல் - இயற்பியல் பாடங்களில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால், கட் - ஆப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், தருமபுரி உள்பட மொத்தம் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கல‌ந்தா‌ய்வு ஜூலை 4ஆம் தேதி தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்