''மரணபயத்தில் மதுரை மக்கள் உள்ளனர் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவிதமான உமியளவு உண்மையும் கிடையாது'' என்று தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 'மரணபயத்தில் மதுரை மக்கள்' என்ற தலைப்பில் கடந்த 25ஆம் தேதியிட்ட 'தினகரன்' நாளேட்டில் மிகப் பெரிய தலைப்பிட்டு, அரைப்பக்கச் செய்தியாக அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையொன்று தி.மு.க அரசுக்கும், கட்சிக்கும் எதிரான செய்திகள் கொண்டதாக வரிக்கு வரி விஷம் கக்கிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் அந்த அறிக்கையில் எந்தவிதமான உமியளவு உண்மையும் கிடையாது. தேவையில்லாமல், அரசுக்கு அவப்பெயர் வர வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏனைய நாளேடுகளில் பெரும்பான்மை ஏடுகள் ஜெயலலிதாவின் அறிக்கையை முழுமையாக வெளியிட வில்லை என்கிறபோது, 'தினகரன்' நாளிதழ் மட்டும் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பதில் இருந்து, பலமுறை அறிவுறுத்தியும் கேளாமல் நடந்து கொள்ளும் அந்த ஏட்டின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே தி.மு.க.வுக்கும் 'தினகரன்' இதழுக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், தி.மு.க.வினர் யாரும் அந்த இதழில் விளம்பரங்களோ, செய்திகளோ தரத் தேவையில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறியுள்ளது தி.மு.க. தலைமைக் கழகம்.