நதிகள் இணைப்பு திட்டம்: முதல்வருக்கு காங்கிரஸ் பாராட்டு!
புதன், 25 ஜூன் 2008 (14:45 IST)
தமிழகத்திற்குள் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, மேலும் பல்வேறு கதவணைகள் அமைக்கும் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தி தமிழகத்தை செழிப்புறச் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்குள் நதிகளை இணைக்கும் மகத்தான முதல் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்திருப்பதன் மூலம் தமிழ் மண்ணை வளமிக்க பூமியாக மாற்றிக் காட்டும் மற்றுமொரு வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்.
நீண்ட பல ஆண்டுகளாக தமிழக மக்கள் குறிப்பாக விவசாயப் பெருமக்கள் பல்வேறு வழிகளில் போராடி, வாதாடி வரும் பெரும் கோரிக்கை இது. கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் பாய்ந்தோடும் காவிரி, பெரியாறு, பாலாறு நீர் உரிமைகளில் நமக்குள்ள பங்கீட்டை பெற ஒரு பக்கமும், மழை வெள்ளக் காலங்களில் தமிழகப் பகுதியிலுள்ள அந்த ஆறுகளில் இணைந்துள்ள கிளை ஆறுகளின் மூலம் உபரியாக வழிந்தோடி கடல்நீரில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கும் நிலை ஒரு பக்கமும், தமிழகத்தை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.
இத் தொடர் இன்னல்களை களைந்து தமிழகத்தில் நீர்வளத்தை பெருக்கும் வகையில் முதல் கட்டமாக ரூ.165 கோடியில் அற்புதமான திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்து தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் வாழ்த்துக்கும், நன்றிக்கும் உரியவராகியுள்ளார்.
வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் வழிந்தோடும் உபரிநீரைத் தேக்கி பயன்படுத்தும் வகையில் கட்டளைப் பகுதியில் கதவணைகள் அமைக்கும் திட்டம் முதலமைச்சரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மேலும் இதுபோன்று பல்வேறு கதவணைகள் அமைக்கும் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தி தமிழகத்தை செழிப்புறச் செய்யும் முதலமைச்சர் கருணாநிதியை பாராட்டுகிறேன். மேலும் அவரது சாதனைகளுக்கு தமிழக மக்கள் என்றும் உறுதுணையாக இருப்பார்கள் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.