"தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறவில்லை. அவர்களே முடிவெடுத்து வெளியே அனுப்பினார்கள்'' என்று பா.ம.க. தலைவர் கோ.க.மணி கூறினார்.
நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஷ சாராய சாவு தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டு உள்ளது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காத இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்று சுகாதார ஆய்வு சொல்கிறது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் மனித சீரழிவிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பது மது பழக்கம் தான்.
விலைவாசி உள்பட எல்லாவற்றுக்காகவும் பா.ம.க. போராடி வந்துள்ளது. மத்திய அரசு ஆன்-லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வரை குறையாது. 2011ல் பா.ம.க. ஆட்சி வர வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். அதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் உள்ளது. அதில் காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம்.
காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் போது, அ.இ.அ.தி.மு.க.வுடன் பேச அவசியமே இல்லை. அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வருங்காலத்தில் ஏற்படுமா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறவில்லை. அவர்களே முடிவெடுத்து வெளியே அனுப்பினார்கள். தி.மு.க. வெளியேற்றி விட்ட நிலையில் அவர்களிடம் இட ஒதுக்கீடு பற்றி பேச மாட்டோம் என்றார் கோ.க.மணி.