இடஒதுக்கீடு தீர்ப்பு: கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு கருணாநிதி பாராட்டு!
செவ்வாய், 24 ஜூன் 2008 (17:17 IST)
உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்து சமுதாய மாற்றத்திற்கு வித்திட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தின் 200வது ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கி முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழக அரசு நீதித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறிய கருணாநிதி, இன்னும் நீதித்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றார்.
கடந்த 1960களில் தஞ்சையில் தேர்தலில் தாம் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது, அது செல்லாது என அறிவிக்கக் கோரி இதே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், பின்னர் அந்த வழக்கில் தமக்கு ஆதரவாக நீதிபதி ஒருவர் தீர்ப்பு அளித்ததையும் கருணாநிதி நினைவு கூர்ந்தார்.
உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்து சமுதாய மாற்றத்திற்கு வித்திட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக கருணாநிதி கூறினார்.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, சட்ட ஆணைய தலைவர் ஏ.ஆர்.லட்சுமணன், மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் கே.வேங்கடபதி, நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், கோ.சி.மணி, உபயதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.