கருணாநிதி டெல்லி பயணம் ரத்து!
திங்கள், 23 ஜூன் 2008 (16:35 IST)
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு பற்றிப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, முதல்வர் கருணாநிதியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தான் பங்கேற்கவிருந்த, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு தனது டெல்லி பயணத்தை ரத்து செய்யக் கருணாநிதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இப்புத்தக வெளியீட்டு விழாவின் இடையில்தான பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டுச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க கருணாநிதி முடிவு செய்திருந்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கருணாநிதியைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா ஆகியோர், தங்களுக்கும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கும் இடையில் அணுசக்தி உடனபாடு தொடர்பாக உள்ள முரண்பாடுகள் பற்றி விளக்கினர்.
மத்தியில் ஆளும் கூட்டணியில் முக்கியக் கட்சியான தி.மு.க., அணுசக்தி உடன்பாட்டைவிட முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று இடதுசாரித் தலைவர்கள் கருணாநிதியிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், அணுசக்தி உடன்பாட்டு விடயத்தில் மத்திய அரசு என்ன முடிவை எடுக்கிறதோ அதன்படி நடப்போம் என்று கருணாநிதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது ஆஸ்ட்ரேலியாவில் உள்ள மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லி திரும்பியதும் நடக்கவுள்ள இடதுசாரி- ஐ.மு.கூ. உயர்மட்டக் குழுக் கூட்டத்தின் முடிவே அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.