''சொத்து வரி தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி அளித்த விளக்க உரையை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழக அரசுக்கு அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் தேவைகளுக்கு ஏற்ப சொத்து வரியை தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றிக்கொள்ளலாம் என்றும், தேவையில்லையெனில் விட்டு விடலாம் என்றும், அரசு உயர்ந்தபட்ச சதவீதத்தை மட்டுமே வகுத்தளித்துள்ளது என்றும், சொத்து வரியை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்றும் ஒரு பெரிய பிரசங்கம் செய்தார்.
அரசாணை உடனடியாக ரத்து செய்யப்படுமா, செய்யப்படாதா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் மீது பழியைப்போட்டிருப்பது கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.
முதலமைச்சர் கருணாநிதியின் வெற்று பிரசங்கத்தை வைத்து சொத்துவரி குறித்து முடிவு எடுப்பதில் சிரமங்கள் இருப்பதாக உள்ளாட்சி அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சொத்து வரி உயர்த்தப்படுமா? அல்லது உயர்த்தப்படாதா? என்ற சந்தேகத்திற்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே சொத்துவரி குறித்த முதலமைச்சரின் விளக்க உரையை அரசாணையாக வெளியிட்டால் தான் இந்த சொத்துவரி உயர்வுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஏதுவாக இருக்கும் என்று உள்ளாட்சி அமைப்புகள் கருதுகின்றன. எனவே சொத்து வரி தொடர்பாக முதலமைச்சர் அளித்த விளக்க உரையை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்த அ.இ.அ.தி.மு.க தயங்காது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.