25 லட்சம் மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதி சீட்: தென்னரசு!
வெள்ளி, 20 ஜூன் 2008 (12:22 IST)
நாட்டிலேயே முதல் முறையாக மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு அளவில் இலவச பேருந்து அனுமதி சீட் வழங்கும் திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக 20,000 மாணவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு அளவிலான பேருந்து இலவச பேருந்து அனுமதி சீட் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
சென்னை ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 20,000 மாணவர்களுக்கு இந்த கையடக்க பேருந்து இலவச அனுமதி சீட்டுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதி சீட்டு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது ஆண்டுக்கு 25 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவர்கள் வரவேண்டும் என்பதற்காகவே இலவச பேருந்து அனுமதி சீட்டு, இலவச சீருடை, இலவச சைக்கிள், பள்ளி முதல் கல்லூரி வரையிலான சிறப்பு கல்வி கட்டணம் ரத்து போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.