பா.ம.க வருத்தம் தெரிவித்தால் சேர்க்கத் தயார்: திருமாவளவனிடம் கருணாநிதி உறுதி!
வெள்ளி, 20 ஜூன் 2008 (10:47 IST)
பா.ம.க. வருத்தம் தெரிவித்தால் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சேர்க்க பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பா.ம.க உடன் ஏற்பட்டு மோதல் காரணமாக கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் பாமகவுடனான உறவை முறித்துக் கொள்வதாக தி.மு,.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி அறிவித்தார். பா.ம.க.வுடனான உறவு குறித்து தி.மு.க முடிவெடுப்பதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தி.மு.க- பா.ம.க உறவு நீடிக்க வேண்டியது அவசியம். கூட்டணியில் பிளவு ஏற்பட்டால் சமாதான முயற்சியில் ஈடுபடுவேன்' என்றார். இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது, பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க.வை விலக்கியது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் விரிவாக பேசினேன். அப்போது தி.மு.க. நிலைப்பாடு குறித்து முதல்வர் கருணாநிதி என்னிடம் தெரிவித்தார். மேலும் தி.மு.க. முக்கிய தலைவர்கள் குறித்து காடுவெட்டி குரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளதை சுட்டிக்காட்டினார் முதல்வர் கருணாநிதி. காடுவெட்டி குரு மீது பா.ம.க. தரப்பில் நடவடிக்கையோ எந்தவிதமான வருத்தமோ தெரிவிக்கவில்லை. அப்படி வருத்தமோ நடவடிக்கையோ எடுத்தால் கூட்டணியில் சேர்ப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயார் என்று என்னிடம் முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசை சந்தித்து பேச உள்ளேன். இந்த கூட்டணியின் வலிமை சற்றும் குறையாமல் பாதுகாத்து கொள்வது கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் கடமை, பொறுப்பு என்றார் திருமாவளவன். இதனிடையே பா.ம.க. அவசர பொதுக்குழு அதன் கட்சித் தலைவர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பா.ம.க. வருத்தம் தெரிவிக்குமா? அல்லது தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்குமா என்று இன்று தெரிந்து விடும்.
செயலியில் பார்க்க x