பா.ம.க. அவசர தலைமை பொதுக்குழு கூட்டம் சென்னையில் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் கோ.க.மணி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அக்கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேற்றப்பட்டது. இது பற்றி ஆலோசிப்பதற்காக பா.ம.க. தலைமை பொதுக் குழு அவசரமாக வரும் 20ஆம் தேதி கூடுகிறது.
இது குறித்து பா.ம.க. தலைவர் கோ.க.மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர தலைமை பொதுக்குழு கூட்டம் வருகிற 20ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
இப் பொதுக் குழு கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமை ஏற்கிறார். மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு, பா.ம.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் கோ.க.மணி.