மத்திய கூட்டணியில் பா.ம.க வெளியேற்றப்படுமா? கருணாநிதி பதில்!
புதன், 18 ஜூன் 2008 (11:03 IST)
மத்திய கூட்டணியில் பா.ம.கவை வெளியேற்ற வேண்டுமென்று காங்கிரஸ் தலைமையிடம் கேட்பீர்களா? என்ற கேள்விக்கு கருணாநிதி பதில் அளித்தார்.
சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்த பிறகு முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து பா.ம.க வை வெளியேற்ற வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் நீங்கள் கேட்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அப்படி நாங்கள் கேட்பதாக இல்லை என்றார்.
உங்களை ஜி.கே.மணி நேரில் சந்தித்ததாகவும், நீங்கள் குறுந்தகட்டை (சி.டி.) அவருக்கு போட்டுக் காட்டியதாகவும் சொல்கிறார்களே? என்று செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட போது, அது தவறான செய்தி. சில வார பத்திரிகைகளில் வந்தது. அதைத்தவிர எனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.
பா.ம.க.விற்கு பதிலாக வேறொரு கட்சி ஏதாவது உங்கள் அணிக்கு வருமா? என்று கேள்வி எழுப்பியபோது. அப்படி கட்சிகள் வந்தே ஆக வேண்டுமென்றும் எதுவும் கிடையாது என்று கருணாநிதி பதில் அளித்தார்.
மத்திய அமைச்சரவையில் பா.ம.க வினர் தொடர்வார்களா? அதை நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, மத்திய அமைச்சர் அன்புமணி மீது எனக்கு அன்பு உண்டு. அன்புமணிக்கும் எனக்கும், தி.மு.க.விற்கும் எந்த விரோதமும் இல்லை என்றார் கருணாநிதி.
மருத்துவர் ராமதாஸ் உங்களைப்பற்றி மதிப்பெண் போட்டது மாதிரி, அவருடைய தோழமையை குறித்து நீங்கள் எவ்வளவு மதிப்பெண் தருகிறீர்கள்? என்று கேட்டதற்கு, நான் அந்த பரீட்சை பேப்பரையே படித்துப்பார்க்க விரும்பவில்லை. நான் இப்போதும் அவரை ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் மதிக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இன்றைய முக்கிய கூட்டத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வரவில்லை? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மு.க.ஸ்டாலின் அயல்நாடு சென்றிருக்கிறார். நாளை (இன்று) சென்னை திரும்புவதாக தெரிவித்தார் கருணாநிதி.