ஆசனூர் மலைப்பகுதியில் யானை கும்பல் மிதித்து ஒருவர் சாவு!
செவ்வாய், 17 ஜூன் 2008 (15:44 IST)
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் காட்டு யானை கும்பல் மிதித்து ஒருவர் இறந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் வனப்பகுதி. இதன் அருகே உள்ள அரேப்பாளையத்தில் இருந்து கேர்மாளம் செல்லும் வழியில் உள்ளது கெத்தேசால். இது வனப்பகுதி கிராமம் ஆகும்.
இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் வனப்பகுதிக்குள் சென்று கால்நடைகள் மேய்ப்பதும் இதையடுத்து சீமாற்புல் அறுப்பதும் இவர்களுக்கு முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.
நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த குப்பன் (53) மற்றும் சிலர் கெத்தேசால் வனப்பகுதிக்கு சீமாற்புல் அறுக்க சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை கூட்டம் குப்பனை சூழ்ந்துகொண்டு மிதித்து கொன்றது. இதை நேரில் பார்த்தவர்கள் பயந்து கிராமத்திற்கு ஓடிவந்து கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பின் வனத்துறை வனசரகர் சிவமல்லு, ஆசனூர் காவல்துறை உதவி ஆய்வாளர் மாரிச்சாமி ஆகியோர் கிராம மக்களுடன் தீ பந்தம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று குப்பன் பிரதேத்ததை மீட்டனர்.
ஒரு யானை தனியாக இருந்தால் மட்டும் தாக்கும், கூட்டமாக இருக்கும் யானைகள் தாக்காது என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்த சம்பவத்தால் இக்கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.