கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும் : கிருஷ்ணசாமி!
திங்கள், 16 ஜூன் 2008 (16:25 IST)
கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மதவாத கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்றும், கருத்து வேறுபாடுகள் இருந்தால் உட்கார்ந்து பேசி தீர்வுகாண வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அமைச்சர் சிதம்பரம் பற்றி ஜெயலலிதா சொல்வது அபத்தமானது, ஆதாரமில்லாதது. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த பிரதமர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் விலைவாசி உயர்வு இருக்கிறது.
ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சிதம்பரத்தை வம்புக்கு இழுக்கிறார். தமிழர் உயர்ந்த பதவியில் இருப்பதை அவர் கொச்சைப்படுத்துகிறார். தமிழக முதலமைச்சர் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
பா.ம.க விஷயத்தில் கூட்டணி தர்மத்தை புரிந்து செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மதவாத கட்சிகளை எதிர்க்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் உட்கார்ந்து பேசி தீர்வுகாண வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா இக்கூட்டணி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய நல்லெண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.