தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்க்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர தயார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடு சந்தித்து வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கைகளையும், முடிவுகளையும் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.
உரத்தட்டுப்பாடு, பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த முக்கியமான பிரச்சனையிலும் மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படவில்லை. ஆயினும் தமிழக அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பரிசீலித்து வருகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் நாங்கள் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. அதே சமயம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்க்கும் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, சரத்குமார் கட்சி ஆகிய கட்சிகள் தீண்டத்தகாத கட்சிகள் அல்ல.
குஜராத் முதல்வர் மோடியை ஜெயலலிதா பாராட்டியதை தி.மு.க குறை கூறுகிறது. ஆனால் அத்வானி, வாஜ்பாய் ஆகியோருடன் ஆட்சியில் தி.மு.க பங்கேற்றிருந்ததை யாரும் மறந்துவிட மாட்டார்கள் என்று வெங்கையாநாடு கூறினார்.