இலங்கைக்கு 18,000 மின்கலம் கடத்த முயன்றவர் கைது!
சனி, 14 ஜூன் 2008 (13:12 IST)
இலங்கைக்கு 18 ,000 மின்கலம், பீடிபண்டல், துணிகள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் சிறப்பு படையினர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையில் தேவிபட்டிணம் கடற்கரைக்கு விரைந்தனர்.
அப்போது, உள்ளூர் மீனவர் ஒருவர் உதவியுடன் இலங்கையை சேர்ந்த விஜய் உள்பட சிலர் படகில் பொருட்களை கடத்திக் கொண்டிருந்தனர். காவல்துறையினரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் கடலில் குதித்து தப்பினர். இதில் விஜய் என்பவர் காவல்துறையினரிடம் சிக்கி கொண்டார்.
பின்னர் படகை சோதனை செய்த காவல்துறையினர், அதில் இருந்த 18,000 மின்கலம், 6 பீடிபண்டல்கள், 24 துணி பண்டல்களை கைப்பற்றினர். இதையடுத்து விஜய்யை கைது செய்த காவல்துறையினர் படகையும் பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடியவர்களை உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.