தே‌ர்த‌ல் செலவு க‌ட்டாத 8,000 பே‌ர் 3 ஆ‌ண்டு தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட தடை: ச‌ந்‌திரசேகர‌ன்!

சனி, 14 ஜூன் 2008 (11:29 IST)
உ‌ள்ளா‌ட்‌சி தே‌‌ர்த‌லி‌‌ல் போ‌‌ட்டி‌யி‌ட்டவ‌ர்க‌‌ளி‌ல் தே‌ர்த‌ல் செலவு கண‌க்கு கா‌ட்டாத 8,000 பே‌ர் ‌‌‌தகு‌தி ‌‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ள் 3 ஆ‌ண்டுக‌ள் தே‌ர்‌த‌‌லி‌ல் போ‌ட்‌டி‌யிட முடியாது எ‌ன்று மாநில தேர்தல் ஆணையாளர் சந்திரசேகரன் கூ‌றினா‌ர்.

சேல‌த்‌தி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தேர்தல் செலவு கணக்கு காட்டாதவர்கள் சுமார் 8,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு முதலில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அடுத்து 3 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது.

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், உறுப்பினர்கள் இறந்ததால் காலியான இடங்கள், ராஜினாமா செய்ததால் காலியான இடங்கள் ஆகியவற்றுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. காலியாக உள்ள பதவி இடங்கள் பற்றிய விவரம் பெறப்பட்டு உள்ளது.

இதுவரை சுமார் 325 பதவி இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாத இறுதிவரை காலி இடங்கள் விவரம் பெறப்பட்டு, அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் எ‌ன்று ச‌ந்‌‌திரசேகர‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்