நெல் கொள்முதல் விலை ரூ.1000 - தமிழக அரசு அறிவிப்பு!
வெள்ளி, 13 ஜூன் 2008 (14:00 IST)
மத்திய அரசு நெல்லுக்கு அளித்துவரும் ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.850 ஆக உயர்த்தியுள்ள நிலையில், தமிழகத்தில் சாதாரண நெல்லுக்கு ரூ.1,000 ஆகவும், சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,050 ஆக கொள்முதல் விலையை உயர்த்துவதாக தமிழக முதலைமச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்!
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008-09ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.850 என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.880 என்றும் நிர்ணயித்துள்ளது.
எனினும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுத்து ஊக்குவிக்கவும், 2008-09ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1050 என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.