சென்னைக்கு ஆகஸ்டில் கிருஷ்ணா நீர்!

வியாழன், 12 ஜூன் 2008 (11:26 IST)
''சென்னைக்கு ஆகஸ்‌டில் கிருஷ்ணா நீர் கிடைக்கும்'' என்று சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் இளங்கோவன், கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் செயற்பொறியாளர் ஏம்ராஜ் ஆகியோர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான ஒப்பந்தத்தின் முதலாவதாக 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை இரண்டாவது கட்டமாக 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கி வருகிறது.

மண்சரிவு காரணமாக தமிழகப் பகுதியில் 13 கி.மீ. முதல் 21 கி.மீ. வரை பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் களிமண் இருப்பதால் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டது.

ஸ்ரீ சத்ய சாய்பாபா அறக்கட்டளை சார்பில் கால்வாய் ஆழப்படுத்துதல், பக்கவாட்டுச் சுவர்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் 2006 மே மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 60 ‌விழு‌க்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜூலை மாதத்திற்குள் நீர்செல்லும் மட்டத்தில் கால்வாய்ப் பணிகள் முடிக்கப்படும். இதன் பிறகு, ஆகஸ்ட் மாதம் முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர் கிடைக்கும்.

பக்கவாட்டுச் சுவர்கள் அமைக்கும் பணிகள் உள்பட அனைத்துப் பணிகளும் செப்டம்பர் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும். கண்டலேறு அணையில் தற்போது 40 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு சென்னைக்கு 8 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதில் பிரச்னையில்லை. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது போதிய நீர் உள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2007 வரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் 32 டி.எம்.சி. நீர் கிடைத்துள்ளது எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்