ஜூலை 21ல் மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் புகைப்பட வாக்காளர் பட்டியல் வெளியீடு: நரேஷ்குப்தா!
புதன், 11 ஜூன் 2008 (10:49 IST)
''தமிழ்நாட்டில் மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் புகைப்பட வாக்காளர் பட்டியல் ஜூலை 21ஆம் தேதி வெளியிடப்படும்'' என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.
திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிசெய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பணியை விரைவாக செய்து முடித்தால்தான் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட முடியும்.
அனேகமாக வரைவு வாக்காளர் பட்டியலை ஜூலை 21ஆம் தேதி வெளியிடலாம் என கருதுகிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து ஒன்றரை மாதத்தில், அதாவது செப்டம்பர் முதல்வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
விடுபட்டவர்களுக்கு புகைப்படங்களை எடுத்து பட்டியலில் சேர்ப்பதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட உள்ள புகைப்பட அடையாள அட்டை தயாரிப்பு மையத்தில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த மையங்களுக்குத் தேவையான முக்கியமான கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுவிட்ட நிலையில் அட்டைகளை நறுக்க தேவையான "கட்டர்' வந்து சேரவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் அவை வந்து சேர்ந்தவுடன் இந்த மையங்கள் செயல்படத் தொடங்கும்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையிலும், புகைப்பட வாக்காளர் பட்டியலைக் கொண்டும் நடத்தப்படும் என்று நரேஷ்குப்தா கூறினார்.