எனது ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று எதற்குமே லாயக்கில்லாமல் செயலிழந்து இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலும், நக்சலைட்டுகளின் ஆதிக்கமும் பெருகி, கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு ஆயுதக்காடாக காட்சி அளித்துக் கொண்டிருப்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
அண்மையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பயங்கர சத்தத்துடன் தோட்டாக்கள் வெடித்து இருக்கின்றன. இதில், இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கிணற்றின் அருகே உள்ள புதரிலும், பாழடைந்த மோட்டார் அறையிலும், மூன்று அங்குலம் அளவுடைய, சுமார் 40 கிலோ எடை கொண்ட ஏ.கே. 47 மற்றும் பல்வேறு ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய மூன்று மூட்டை தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி கிணற்றுக்குள் இருந்த 15 மூட்டை தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேற் படி தோட்டாக்களில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரை உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இது போன்ற தோட்டாக்கள் தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதோ? எப்பொழுது அவைகள் வெடிக்குமோ? என்ற அச்ச உணர்வில் தமிழக மக்கள் உறைந்து போயுள்ளனர்.
எனது ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று எதற்குமே லாயக்கில்லாமல் செயலிழந்து இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை முதலமைச்சர் தருவாரா என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கருணாநிதி தனது குடும்பப் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.