ஆட்சி மாற்றத்தால் மட்டுமே விலைவாசியை கட்டுப்படுத்த முடியும்:நாமக்கல்லில் நடிகர் விஜயகாந்த் பேச்சு

திங்கள், 9 ஜூன் 2008 (17:05 IST)
ஈரோடு: ஆட்சி மாற்றத்தால் மட்டுமே விலைவாசியை கட்டுப்படுத்த முடியும் என நமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் பேசினார்.

பல்வேறு கட்சிகளில் இருந்து தே.மு.தி.க.வில் ஐக்கியமானவர்களின் இணைப்பு விழா நமாக்கல்லில் நடந்தது. நிகழ்ச்சியில் தே.மு.தி.க.வின் நிறுவன தலைவர் நடிகர் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியது, நான் செல்லும் இடமெல்லாம் தே.மு.தி.க. தொண்டர்கள் தோரணம் கட்டி என்னை வரவேற்கின்றனர். இந்த தோரணங்கள் மற்ற கட்சிபோல் ஊழல் பணத்தில் வாங்கியது அல்ல. எங்கள் கட்சி தொண்டர்களின் உழைப்பால் சம்பாதித்த பணத்தில் வாங்கியது. தே.மு.தி.க. வளர்ச்சியை ஆளும் கட்சியனர் தாங்கமுடியாமல் பல்வேறு இடையூர்களை செய்கின்றனர். இதெல்லாம் எங்களை அசைக்கக்கூட முடியாது.

எம்.ஜி.ஆருக்குப் பின் தமிழக மக்களுக்கு யாரும் நல்லது செய்யவில்லை. மக்கள் பல்வேறு கட்சிகளுக்கு மாறி, மாறி வாக்களித்தனர். இதற்கு பலன் அவர்களுக்கு கிடைத்தது விலைவாசி உயர்வு மட்டுமே. இதற்கு எதிராக கோஷம் போட்டால் விலைவாசி குறையாது. ஆட்சி மாற்றத்தால் மட்டுமே விலைவாசியை கட்டுப்படுத்த முடியும்.

மத்திய நிதியமைச்சரிடம் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கூறினால் அதற்கு அவர் எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது என்கிறார். இது வேடிக்கையாக உள்ளது.

எந்த பிரச்சனையானாலும் சோனியாவிடம் பேசிவிடுகிறேன் என கூறும் கருணாநிதி எரிவாயு விலை உயர்வு குறித்து பேசாதது ஏன்? விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து பேசாமல் சேது சமுத்திரதிட்டத்தை பேசுகின்றனர்.

இலங்கை கடலில் தமிழர்கள் செத்து மடிகின்றனர். கச்சதீவு நம்மிடம் இருந்திருந்தால் இந்த கொடுமை நடந்திருக்குமா? தமிழை வளர்த்தேன் என கூறும் முதல்வர் இதுவரை இலங்கை தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் தரவில்லை. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் வழங்கவில்லை. தீவிரவாதத்தை தடுக்க படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வழங்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு, ஆனால் மதிப்பெண் அதிகம். அரசு பள்ளியில் மதிப்பெண் குறைவு ஆனால் சம்பளம் அதிகம்.. இதன் மூலம் நிர்வாகம் சரியில்லை என தெரிகிறது. அரசு பள்ளியில்தான் மாணவ, மாணவிகள் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். மக்களின் பணம் சுரண்டப்படுவதை தடுக்கவே நான் அரசிலுக்கு வந்தேன் என்று நடிகர் விஜயகாந்த் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்