வீரப்பன் மறைவிற்கு பிறகு பெரும்வளர்ச்சி அடைந்துள்ள மலைக் கிராமங்கள்

திங்கள், 9 ஜூன் 2008 (17:04 IST)
ஈரோடு: சந்தனக் கடத்தல் வீரப்பன் மறைவிற்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி கிராமங்கள் வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் நிலங்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சிம்மசொப்பமனமாக விளங்கியவன் சந்தனக் கடத்தல் வீரப்பன். வீரப்பன் மற்றும் அவனது கும்பல் பெரும்பாலும் சத்திமங்கலம் வனப்பகுதியில்தான் அதிகம் நடமாடி வந்தனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதியை சேர்ந்த கடம்பூர், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகள் வீரப்பன் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியாகும்.

கன்னட நடிகள் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது சத்தியமங்கலம் மலைப்பகுதி தாளவாடியில் உள்ள தொட்டகஜனூரில் இருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீரப்பன் முக்கிய புள்ளிகளை கடத்தி செல்லும் சமயங்களில் பேச்சுவார்த்தை நடத்த செல்லும் நக்கீரன் கோபால் பெரும்பாலான நாட்களில் சத்தியமங்கலம் வனப்பகுதியின் வழியாக சென்றுதான் வீரப்பனை சந்தித்தார்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்ந்த சமயத்தில் மலைப் பகுதியில் சாலைகளை புதுபிக்கும் பணிகள் கூட நடக்காமல் இருந்தது. அரசு அதிகாரிகளை வீரப்பன் கடத்தி விடுவான் என்ற அச்சமே காரணம். அதேபோல் மலைப்பகுதியில் உள்ள நிலங்களை ஏக்கர் ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும் கூட நில உரிமையாளர்கள் விற்க தயாராக இருந்தபோதும் அதை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.

மலைப் பகுதி கிராமங்களில் மலைப் பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களே வாழ்ந்து வந்தனர். ஆசனõர், திம்பம் மலைப்பகுதியில் தட்பவெட்ப நிலை ஊட்டி, கொடைக்கானல் போல் இருந்தாலும் இப்பகுதியில் மக்கள் வருவதற்கு அச்சப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் வீரப்பன் மறைவிற்கு பிறகு இப்பகுதியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது ஆசனூர் மற்றும் திம்பம் மலைப்பகுதியில் பார்த்த இடமெல்லாம் பெரும்புள்ளி மற்றும் தொழிலதிபர்களின் தங்கும் விடுதிகள் காணப்படுகிறது. இதுதவிர வியாபார நோக்குடன் இங்கு தனித்தனி அறைகளாக கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஒரு நபர் தங்க ரூ.300 வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் சராசரியாக ஏக்கர் ஒன்று ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையான நிலம் தற்போது ரூ.30 லட்சமாக உயர்ந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய புள்ளிகள் இங்கு தங்குவது வழக்கமாகிவிட்டது.

மேலும் இந்த வழியாக செல்லும் வனப்பகுதி சாலையில் சாதாரணமாக யானை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பார்க்க முடிவதால் தற்போது சுற்றுலா தளமாக மாறிவிட்டது. வனப்பகுதி கிராமங்களில் கீழ்நோக்கி சென்றுகொண்டிருந்த இப்பகுதி மக்களின் வாழ்க்கை தற்போது உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்