என்.எல்.சி. ஊழியர்கள் போராட்டத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!
திங்கள், 9 ஜூன் 2008 (15:54 IST)
என்.எல்.சி. ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்தி, மோசமான நிலைக்கு செல்லும் நிலை உருவாகி இருப்பதால் பிரதமர் உடனடியாக தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று எழுதியுள்ள கடிதத்தில், என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் 12,000 ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தினமும் 750 மெகாவாட் வரை மின்சார உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழ் நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி மோசமான நிலைக்கு செல்லும் நிலை உருவாகி இருக்கிறது.
தொழிலாளர்களின் போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் பரவும் நிலை உள்ளது. எனவே நீங்கள் உடனடியாக தலையிட்டு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கடிதத்தில் கூறியுள்ளார்.