ரூ.200 கோடியில் புதிய சட்டமன்ற கட்டிடம்

சனி, 7 ஜூன் 2008 (10:04 IST)
ரூ. 200 கோடி செலவில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகக் கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 12-ம் தேதி மாலை நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழக சட்டசபை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து மாற்றி, சென்னை அரசினர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமை செயலக வளாகம் கட்டப்படவுள்ளது.

இந்த புதிய சட்டசபை தலைமை செயலக வளாகம் பலமாடி கட்டிடமாக இருக்கும் என்றும் இதற்கான வடிவமைப்பை ஜெர்மன் நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது‌ம் குறிப்பிடத்தக்கது.

அந்த வடிவமைப்பை முதல்-அமைச்சர் கருணாநிதி பார்த்து சில மாற்றங்களை செய்தார்.

புதிய வடிவமைப்புடன் 12-ந் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ராஜாஜி மண்டபம் எதிரில் புதிய சட்டசபை தலைமை செயலக வளாகத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது. விழாவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். அவை முன்னவர் அமைச்சர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார். தலைமை செயலாளர் திரிபாதி நன்றி கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்