தமிழக பந்த்: இயல்பு நிலை பாதிப்பில்லை

சனி, 7 ஜூன் 2008 (09:36 IST)
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று இடதுசாரிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படவில்லை.

இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு , எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளில் பாதுகாபு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணிக்கு தங்களது போராட்டத்தைத் தொடங்கியுள்ள இடதுசாரிகள், மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபடுகின்றனர்.

எனினும், காலை முதலே வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளும் வழக்கம் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. நகரில் எந்தப் பகுதியிலும் இதுவரை சாலைப் போக்குவரத்தில் பாதிப்பில்லை.

அதேபோல், ரயில் போக்குவரத்திலும் எவ்வித பாதிப்புமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், அரசு போக்குவரத்து மற்றும் மாநகர போக்குவரத்து பேருந்துகளில், கம்யூனிஸ்ட் தொழிற் சங்க ஓட்டுனர்கள் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. ஆயினும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஒரு சில ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட சட்ட மன்ற உறுப்பினர் சிவபுண்ணியம்,
உலக நாதன், பத்மாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்