சுயநிதி பொறியியல் கல்லூரி கல்வி கட்டண உயர்வினைத் திரும்ப பெற்று கல்வித் துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வராவிட்டால், சிலி நாட்டில் ஏற்பட்டது போல மாணவர் புரட்சி இங்கு உருவாகும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக இட ஒதுக்கீடு கட்டணம் ரூ.32,500-இல் இருந்து ரூ.62,000- மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 271 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு சுயநிதி கல்லூரிகளுக்கு 125 கோடி ரூபாய் வருமானம் வந்தது. அது இந்த ஆண்டு 240 கோடி ரூபாயாக அதிகரிக்கும். 4 ஆண்டுகளுக்கு இந்த வருமானம் அவர்களுக்கு கிடைக்கும். இது ஒரு பகல் கொள்ளை. இதற்கு அரசும் துணை போவது வேதனை அளிக்கிறது.
நிர்வாக ஒதுக்கீட்டிற்கு விருப்பம் போல் நன்கொடை பெறுப்படும் நிலையில் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகளும், சுயநிதி கல்லூரிகளின் உரிமையாளர்களும் கூட்டணி வைத்து இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்கள்.
இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.
சுயநிதி கல்லூரிகளின் வரவு செலவுகளை ஆராய்ந்து கல்விக் கட்டணத்தை நிர்ணயித்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. அவர்கள் கல்விச் சேவை புரிந்து திவாலாகி விட்டார்களா என்ன?
ஒரு கல்லூரி ஆரம்பித்து 10 கல்லூரி தொடங்கி இருக்கிறார்கள். இப்போது, மேலும் 61 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான மனுக்கள் கோட்டைக் கதவை தட்டுகின்றன.
இந்நிலையில் கல்வி கட்டணத்தை உயர்த்தியது நியாயமா? இதனை திரும்ப பெற்று கல்வித் துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வராவிட்டால், சிலி நாட்டில் ஏற்பட்டது போல மாணவர் புரட்சி இங்கு உருவாகும். அதன் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும்.