இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை

வெள்ளி, 6 ஜூன் 2008 (17:07 IST)
நாமக்கல் அருகே குடிபோதையில் இரு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு அருகே உள்ள நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலம் நாச்சிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவருக்கு சுதா (24) என்ற மனைவியும், வர்சினி (5), ராஜா (3) ஆகிய இரண்டு குழந்தைகள் இரு‌ந்தன.

அருண்குமார் உணவு விடுதி வைத்து நடத்தி வருகிறார். அருண்குமார் குடிப்பழக்கம் உள்ளவர். நாள்தோறும் குடித்துவிட்டு மனைவி சுதாவுடன் சண்டையிடுவது வழக்கம். சம்பவத்தன்று குடித்துவிட்டு தன் மனைவியிடம் சண்டையிட்ட அருண்குமார் கோபத்தில் தன் இரண்டு குழந்தைகள் மற்றும் தான் வளர்த்துவரும் நாய் ஆகியவையுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் தன் குழந்தைகள் இரண்டையும் மற்றும் நாயையும் கிணற்றில் தள்ளி விட்டார். நீரில் தத்தளித்த குழந்தைகள் இரண்டும் பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த அருண்குமார் நானும் தற்கொலை செய்கிறேன் என சத்தமிட்டு கிணற்றில் குதித்துள்ளார்.

இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் அருண்குமார் மற்றும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயையு‌ம் காப்பாற்றினர். ஆனால் இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.

இது குறித்து சேத்தமங்கலம் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்