இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு சென்ற ஆண்டுக் கட்டணம் 32,500 ஆக இருந்ததை இந்த ஆண்டு 62,500 என்று பாலசுப்பிரமணியம் கமிட்டி அறிவித்துள்ளதை மாற்றிட கலைஞர் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று மக்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
கமிட்டி அறிவிப்பின்படி இந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்ட 35 விழுக்காடு மாணவர்களிடமிருந்து தலா 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாகப் பெறுவதன் மூலம் அவர்களுக்கு 70 சதவிகித அதிகக் கட்டண நிதி கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் சில தனியார் கல்லூரி நிறுவனங்களுக்கு பணம் குவிக்கும் வழியைத்தான் அரசின் கமிட்டி காட்டியிருக்கிறதேயன்றி ஏழை எளிய, நடுத்தர மாணவர்களின் பரிதாப நிலையையும், அது தொடர்பாக தமிழகமெங்கும் எதிரொலித்து வரும் கண்டனக் குரலையும் கமிட்டி கிஞ்சித்தும் மதிக்காமல் புறக்கணித்து விட்டது.
எனவே தமிழக அரசு பாலசுப்பிரமணியம் கமிட்டி பரிந்துரையை ஏற்காமல் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு மாணவர்களின் கட்டணத்தை மீண்டும் வெகுவாக குறைத்து அறிவித்திட பெரிதும் கேட்டுக் கொள்கிறேன்.