தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்!
செவ்வாய், 3 ஜூன் 2008 (19:08 IST)
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களில் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 48 மணி நேரத்தில் கணித்துள்ள விவரங்கள் வருமாறு:
கர்நாடகத்தில் தெற்கு கடற்கரை மற்றும் உள்புறப் பகுதிகள், கேரளத்தில் பல்வேறு பகுதிகள், லட்சத்தீவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகள், தெலுங்கானா, ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடற்கரைகளில் வறண்ட வானிலை காணப்பட்டது.
அதிகபட்ச மழை விவரங்கள் சென்டி மீட்டரில்: ஆலப்புழா, குடகு- தலா 6. பெல்காம், தேவநகிரி, திருப்பத்தூர் - தலா 5. திருவனந்தபுரம், உடுப்பி, கோலார் - தலா 4. உளுந்தூர்பேட்டை, கொச்சி விமான நிலையம், கோட்டயம், உத்தர கன்னடா, ஹாவேரி, சாம்ராஜ் நகர், சித்ரதுர்கா, அனந்தபூர் - தலா 3. நீலகிரி, ஷிமோகா, தும்கூர் தலா 2.
தென் மாநிலங்களில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அடிலாபாத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
அடுத்த 48 மணி நேரத்திற்கான (வியாழன் காலை வரை) வானிலை அறிவிப்பு: தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களின் சில பகுதிகள், வடக்கு கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகள், தெற்கு கர்நாடகம், லட்சத்தீவு, கேரள மாநிலம் ஆகியவை முழுவதும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இதில் கேரளம், லட்சத்தீவு, கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்.