கிரீமி லேயர் அம்சத்தை நீக்கி இட ஒதுக்கீடு அமல்: தி.மு.க. தீர்மானம்!
திங்கள், 2 ஜூன் 2008 (18:26 IST)
"பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயர்) இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைத்திட வேண்டும் என்ற அம்சத்தை நீக்கி, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பாகுபாடின்றி இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிப்பதற்கு சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று" தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இதுகுறித்து தி.மு.க. பொதுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், "மத்தியில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை நிறைவேற்றியதையும்; அந்த சட்டத்தின் செல்லத்தக்க தன்மையினை இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்டபெஞ்ச் ஏற்றுக் கொண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும்; இந்தப் பொதுக்குழு மனமார வரவேற்று பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்- 27 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை விலக்கிவிட வேண்டுமென்று தெரிவித்திருப்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.
தி.மு.க.வை பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே இட ஒதுக்கீட்டுக்குள் பொருளாதார அளவுகோலைத் திணிப்பதையோ, பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதையோ ஏற்றுக் கொண்டதில்லை.
இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. பல நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட- சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு -அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இட ஒதுக்கீடு என்பதாகும்.
எனவே, பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைத்திட வேண்டும் என்ற அம்சத்தை நீக்கி, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பாகுபாடின்றி இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிப்பதற்கு சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.