தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு இல்லை: அரசு விளக்கம்!
திங்கள், 2 ஜூன் 2008 (12:42 IST)
உரத் தட்டுப்பாடு நிலவுவதாக பொய்யான தகவல்கள் கூறி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முனையும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாட்டில் நடப்பு காரீப் பருவமான ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நெற்பயிர் 7 லட்சத்து 71 ஆயிரம் எக்டரிலும், சிறு தானியங்கள் 5 லட்சம் எக்டரிலும், பயறுவகை பயிர்கள் 3 லட்சத்து 40 ஆயிரம் எக்டரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 5 லட்சத்து 33 ஆயிரம் எக்டரிலும், பருத்தி 50 ஆயிரம் எக்டரிலும், கரும்பு 2 லட்சம் எக்டரிலும் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிர்களுக்கு ரசாயன உரங்களான யூரியா 4 லட்சத்து 35 ஆயிரம் மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 2 லட்சம் மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2 லட்சம் மெட்ரிக் டன்னும் தேவை என கணக்கிடப்பட்டு முதலமைச்சர் கருணாநிதி அறிவுரைப்படி விவசாயிகளுக்குத் தேவையான அளவு உரத்தை வாங்கி உரிய நேரத்தில் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் 2008, மே மாதத்திற்கு யூரியா 60 ஆயிரம் மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 23 ஆயிரம் மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 25 ஆயிரம் மெட்ரிக் டன்னும் தேவைப்படுகிறது. மே மாத யூரியா உரத்தேவையான 60 ஆயிரம் மெட்ரிக் டன்னில், இன்றுவரை 16 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டு 78 ஆயிரத்து 451 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது.
பொட்டாஷ் உரத்தேவையான 25 ஆயிரம் மெட்ரிக் டன்னில், 15 ஆயிரத்து 199 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டு 12 ஆயிரம் மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது. அது போன்று டி.ஏ.பி. உரத்தைப்
பொறுத்தமட்டில், மே மாத தேவையான 23 ஆயிரம் மெட்ரிக் டன்னில், இதுவரை 19 ஆயிரத்து 276 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டு டான் பெட் நிறுவனத்தில் 5 ஆயிரத்து 57 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது.
எனவே மே மாதத்தில், யூரியாவில் 34 ஆயிரத்து 591 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் உரத்தில் 2 ஆயிரத்து 199 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. ஆயிரத்து 333 மெட்ரிக் டன்னும் தேவையை விட அதிகமாகவே உள்ளது.
மேலும் டி.ஏ.பி. உரத்தை பொறுத்தமட்டில் உடனடியாக 20 ஆயிரத்து 986 மெட்ரிக் டன் உரங்கள் இந்தியன் பொட்டாஷ், ஜூவாரி மற்றும் கோரமண்டல் பெர்டிலைசர்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, மேட்டூர் அணை 12.6.2008 அன்று திறப்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஜுன் மாதத்திற்கு யூரியா 30 ஆயிரம் மெட்ரிக் டன் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது.
அரசு எடுத்த விரைவான நடவடிக்கையின் மூலமாக மூன்று டி.ஏ.பி. கப்பல்கள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இம்மூன்று டி.ஏ.பி. கப்பல்களில் முதலாவதாக ஜூவாரி நிறுவனம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆஃப்ரிக்கன் குளோரி என்ற கப்பல் 20.5.2008 அன்று சென்னை துறைமுகத்தை வந்து அடைந்துள்ளது.
விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி டி.ஏ.பி. உரம் கிடைக்கும் வண்ணம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு டான் பெட் நிறுவனத்தை மாநில ஒருங்கிணைப்பு முகமையாக நியமித்து, டி.ஏ.பி. உர இறக்குமதியாளர்களிடம் இருந்து, உரத்தை வாங்கி இம்மாநில விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு, அந்நிறுவனத்திற்கு தமிழக அரசு வட்டியில்லா வழிவகை முன்பணமாக 30 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
உரத் தட்டுப்பாடு நிலவுவதாக பொய்யான தகவல்கள் கூறி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முனையும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டும் அரசு. எனவே விவசாயிகள் தவறான பொய்ப்௦ பிரசாரங்களையும், தகவல்களையும் கேட்டு ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.