இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
மும்பையைச் சேர்ந்த திவான் கன்சல்டன்சி என்ற சட்ட விரோத பணியமர்த்தும் நிறுவனத்தால், இந்திய இளைஞர்கள் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டு உள்ளார்கள். இந்த நிறுவனம், நிறைய சம்பளத்தோடு அனைத்து வசதிகளுடன், அமெரிக்காவில் நிரந்தர வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளுடன் விளம்பரம் செய்து சென்னையிலும் மற்ற நகரங்களிலும் 2006-ஆம் ஆண்டு போலியான நேர்முகத் தேர்வையும் நடத்தி இருக்கிறது.
இந்த போலி நிறுவனத்தின் கட்டாயத்தின் பேரில் வேலைவாய்ப்புக்காக சுமார் 600பேர் தலா ரூ.6 லட்சம் கொடுத்திருப்பதுடன் அவர்கள் நீட்டிய காகிதங்கள் அனைத்திலும் கையெழுத்து இட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டு அங்கு நியூ ஆர்லியன்ஸ்சில் உள்ள சிக்னல் என்ற சர்வதேச நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள்.
அங்கு அவர்கள் பேரதிர்ச்சி அடையும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கொடுமையான வேலை கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், தங்குமிட வசதிகள் எதுவுமின்றி ஆடு, மாடுகளை அடைப்பது போல நீண்ட சரக்கு லாரிகளில் படுக்கைகளைப் போட்டு தங்கவைத்திருக்கின்றனர். ஒருவழியாகச் சமாளித்து அந்த நிறுவனத்தின் பிடியிலிருந்து இவர்கள் தப்பியுள்ளனர்.
பாதுகாப்பு கோரியும், நீதி வேண்டியும் அவர்கள் மே மாதம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வாஷிங்டன் வரை நடைபயணம் மேற்கொண்டனர்.
அவர்களில் 17 பேர் மே 14ஆம் தேதி வாஷிங்டனில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை முன்பு அமைதியான வழியில் உண்ணா நோன்புப் போராட்டம் மேற்கொண்டனர். 10 நாட்களுக்கு பிறகு இந்த உண்ணா நோன்பில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களின் உடல்நிலை மிகவும் மோசமானது.
மே 25 ஆம் தேதி பட்டினிப் போராட்டக்காரர்களின் குழு ஒன்று, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ரோனனை சந்தித்து இந்திய அரசின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இந்திய தூதர் 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அவர்களது கோரிக்கை விண்ணப்பத்தை அதுவரை தாம் பார்க்கவில்லை என்று போராட்டக்காரர்களிடம் தெரிவித்ததாக எனக்கு தெரியவருகிறது. இந்தியத் தூதரின் இதுபோன்ற செயல்பாடுகள், அவரது அலட்சியப் போக்கையும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நலன்களில் துளியும் அக்கறை இல்லாத இரக்கமற்ற தன்மையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருந்து நீதிமன்றங்களில் தங்களுடைய வழக்குகள் தொடர்பாக வாதாடுவதற்கு உதவியாகவும், அந்த நிறுவனத்திடம் இருந்தும் அவர்களைப் பணியில் அமர்த்திய சட்டவிரோத கும்பலிடம் இருந்தும் போதிய ஈட்டுத் தொகையைப் பெறும் வகையிலும், தொழிலாளர்களை ஏமாற்றியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டியும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.