திட்டமிட்டபடி ஒகேனக்கல் திட்டம்: கருணாநிதி!

வியாழன், 29 மே 2008 (09:44 IST)
''திட்டமிட்டபடி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்'' என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அவ‌ர் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக மத்திய அரசுக்கோ, கர்நாடக அரசுக்கோ கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. கர்நாடகத் தேர்தலுக்காக ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. முறையாக வகுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் காலஅட்டவணைப்படி நடைபெற்று வருகிறது. இப்போது இத்திட்டத்துக்கான மேற்பார்வை ஆலோசகரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.

கர்நாடகத் தேர்தல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் இல.கணேசன் கூட, "ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற நாம் கர்நாடகத்திடம் அனுமதி கேட்கத் தேவையில்லை'' என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லாததுபோல, இனி தயக்கமோ, மெத்தனமோ காட்டக் கூடாது என்றும், இதற்காக பிரதமரை வ‌லியுறுத்தி கடிதம் எழுத வேண்டும். ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? என்றும் சிலர் அறிக்கை விட்டு வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.

கர்நாடகத் தேர்தல் காரணமாக இரு மாநில மக்களிடையே கிளர்ச்சிகளும், வன்முறை வெறியாட்டங்களும் நடந்தால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான் தேர்தல் முடியும்வரை அமைதி காப்போம் என்று அறிக்கை விடுத்தேனே தவிர ஒகேனக்கல் திட்டத்தை ஒருபோதும் ஒத்தி வைக்கவில்லை என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்