விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சரிடம் கருணாநிதி கோரிக்கை!
வியாழன், 29 மே 2008 (09:30 IST)
''விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங்கிடம் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங், நேற்று முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் வருவதையடுத்து அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். அவரது பிறந்தநாள் அன்று நான் டெல்லியில் இருக்க மாட்டேன் என்பதால் இப்போதே வந்து வாழ்த்து கூறினேன்.
விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்று என்னை முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடகாவில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும், அங்கு காங்கிரசின் நிலை பற்றி ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என்றார்.
தமிழகத்துக்கு 3 மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வரும் திட்டம் எந்த அளவில் உள்ளது என்று கேட்ட கேள்விக்கு, இவற்றை தமிழகத்தில் ஏற்படுத்துவது 11-வது 5 ஆண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. உரிய காலகட்டத்தில் அவை அமைக்கப்பட்டு விடும் என்றார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் `கிரிமிலேயர்' பிரச்சினை எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன் சிங், இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் இருப்பதுபற்றி இங்கு நான் நேரடியாக எதையும் கூறிவிட முடியாது. கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, அதற்கு ஒரு வழிவகை காண முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதற்கிடையே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை அமல்படுத்தி வருகிறோம் என்றார்.