சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு: தமிழகத்தில் 98.56 விழுக்காடு தேர்ச்சி!
புதன், 28 மே 2008 (09:52 IST)
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ்நாட்டில் 98.56 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நடந்த சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று மாலை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கோவா, லட்சதீவு, டாமன்-டை, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் அடங்கிய சென்னை மண்டலத்திற்கு மட்டும் நேற்று தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
சென்னை மண்டலத்தில் 10-வது வகுப்புத்தேர்வை 96,262 பேர் எழுதினர். அவர்களில் 91,690 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 3,799 பேர் ஒரு பாடத்தில் மட்டும் பெயில் ஆனவர்கள். தேர்ச்சி விழுக்காடு 95.25 ஆகும். கடந்த ஆண்டு 93 விழுக்காடு. இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு உயர்ந்துள்ளது.
சென்னை மண்டலத்தில் மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 95.58 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 94.99. தமிழ்நாட்டில் மட்டும் 14,773 பேர் எழுதினார்கள். அவர்களில் 14,561 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.56 விழுக்காடு தேர்ச்சி ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 98.93 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 98.26.
புதுச்சேரியின் தேர்ச்சி விழுக்காடு 99.69 ஆகும். இது தான் சென்னை மண்டலத்தில் அதிக தேர்ச்சி விழுக்காடு. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 51.39 விழுக்காடு தேர்ச்சி மட்டுமே பெற்றுள்ளனர் என்று சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. இணைசெயலாளர் நாகராஜூ கூறினார்.
கோபாலபுரம் டி.ஏ.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிரவன் 500-க்கு 489 மார்க் எடுத்து பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் சமஸ்கிருதம்-100, ஆங்கிலம்-90, அறிவியல்-99, கணிதம்-100, சமூக அறிவியல்-100 என்று மதிப்பெண் எடுத்துள்ளார்.
மாணவர் கிருஷ்ணபிரசாத் 484 மார்க் எடுத்து பள்ளியில் 2-ம் இடத்தையும், மாணவர் ஸ்ரீவத்சன் 482 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.