சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களை கடந்த 25 நாள்களாக வாட்டி வந்த கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயிலின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் படாத பாடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். காலையிலேயே வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுவதால், போகப்போக புழுக்கமும் அதிகரித்து விடும்.
வெயில் காரணமாக பகல் நேரங்களில் பலரும் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். மாலை நேரத்தில் கடற்கரை, பூங்காக்களை தேடி செல்வதன் காரணமாக அந்த பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கோடையில் வழக்கமாக நல்ல மழை பெய்வது உண்டு. ஆனால், இந்த ஆண்டு கோடை மழை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெய்யவில்லை என்றுதான் கூறவேண்டும்.
கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகஅளவில் இருந்தது. அது வர, வர குறைந்து கொண்டே வந்தது. கடந்த இரு தினங்களாக மாலை நேரத்தில் பலத்த காற்று வீசுவதால், வெப்பத்தின் தன்மை குறைந்த அளவே தெரிந்தது.
கடந்த 25 நாட்களாக சென்னை நகர மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது.
சென்னையில் கடந்த ஆண்டு கோடையில் மே 16ஆம் தேதி அதிகபட்சம் 109 டிகிரி வெயில் பதிவானது. 2003ஆம் ஆண்டு வரலாற்றில் அதிகபட்சமாக 113 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சென்னையில் இந்த ஆண்டு மே 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் மட்டும்தான் அதிகபட்ச வெயில் 108 டிகிரி பதிவானது. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் இந்த ஆண்டு பதிவாகி இருந்தது.