குண்டாறில் மணல் அள்ளுவதை கண்டித்து மே 29ல் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
செவ்வாய், 27 மே 2008 (15:43 IST)
விருதுநகர் மாவட்டம் குண்டாறில் மணல் அள்ளுவை கண்டித்து மே 29ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் குண்டாறில் மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், அரசு விதிப்படி ஒரு மீட்டர் ஆழம் வரை தான் மணல் அள்ளப்பட வேண்டும் என்று விதி இருந்தாலும், ஐந்து மீட்டர் ஆழம் வரை இங்கு மணல் அள்ளப்படுகிறது.
மணல் அள்ளுவதில் அரசு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. தங்கள் பகுதியில் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர் குறைந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும், விவசாயத் தொழில் கடுமையாக பாதிப்படையும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தால் இதுவரை எடுக்கப்படவில்லை. அந்த பகுதியில் வாழும் மக்களது நியாயமான கோரிக்கையை ஏற்று குண்டாறில் அமைந்துள்ள மணல் குவாரி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், விவசாயத் தொழில் பாதிக்கப்படுவதற்கும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.இ.அ.தி.மு.க. விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் மே 29ஆம் காலை 10 மணிக்கு திருச்சுழி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.